திருநெல்வேலி: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாஞ்சோலை ஊத்து, நாலுமுக்கு, குதிரை வெட்டி, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற இடங்களில் கனமழை பெய்தது.
தொடர்ந்து, நேற்று காலை முதல் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது மிதமான மழை பெய்தது. பிற்பகல் வரை தொடர் மழை பெய்த நிலையில், இரவிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீடித்தது, நேற்று காலை நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஊத்து பகுதியில் 34 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.
இதையும் படிங்க:70 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை!
தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி, நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் நாங்குநேரியில் 51 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது. தொடர்ந்து, நேற்று பகல் முழுவதும் நீடித்த மழையால் மக்கள் அவதி அடைந்தனர். மேலும், இன்றும் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, நெல்லை மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தடை விதித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளில் இன்று வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த திட்டமிட்டு இருந்தால் அதனை நடத்தக் கூடாது என்று ஆட்சியர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.