அரியலூர்:அரியலூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ரமேஷ். நேற்று முன்தினம் விடியற்காலை குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சந்திரனின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரமேஷ் வீட்டின் சுவற்றை உடைத்து உள்ளே சென்றுள்ளது.
லாரி புகுந்ததில், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ரமேஷின் மனைவி அம்பிகா, அவரது குழந்தைகளான ராஜேஷ், ரம்யா, சுபாஷ் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் ரமேஷின் வீடு முற்றிலும் சேதம் அடைந்ததோடு, வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அரியலூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவினர்கள் நேற்று கூறியுள்ளனர். மருத்துவமனை தரப்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று காலை குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும், உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று மறுத்துவிட்டு இன்று காலம் தாழ்த்தி அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியதை கண்டித்து, உறவினர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது விபத்தை ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும், குழந்தைகளின் உடல்நிலையை சரியாக கவனிக்காத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் ஒன்றான அரியலூர் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வருகைபுரிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, அவர்களை கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில், போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள், குழந்தைகளை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!