சென்னை: சென்னை என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வரும் சில இடங்களில் எக்மோரும் ஒன்று. பல சினிமாக்களில் சென்னை மாகாணத்தை குறிப்பிடும் போது எழும்பூர் ரயில் நிலையத்தின் முகப்பு கட்டடத்தைதான் காட்டுவார்கள். தலைநகரில் தவிர்க்க முடியாத அடையாளமாக திகழும் எக்மோரின் வரலாற்றை அறிவோம்.
சிங்கார சென்னையில் முக்கியமான பகுதியான எழும்பூர் கூவத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான ஒரு முக்கிய மையமாகவும் விளங்குகிறது. ரயில் வழி மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் எழும்பூரில் இருந்து தான் ரயில்கள் தொடங்குகிறது. வரலாற்றின் அடிப்படையில் சென்னை மக்களுக்கு எழும்பூர் ஒரு முதன்மையான சின்னமாக திகழ்கிறது.
எழும்பூர் ரயில் நிலையம் (Credit - ETV Bharat Tamil Nadu) வரலாற்று முதலே எழும்பூராக விளங்கி வந்த இந்த பகுதி எப்படி எக்மோர் ஆனது என சென்னையில் வசிக்கும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் பின்னனில் ஒரு சுவாரசியமான காரணம் இருக்கிறது. இது குறித்து எழுத்தாளர் கரண் கார்க்கி நமது ஈடிவி பாரத் தமிழுடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "வரலாற்றின் முன் பகுதியில் எழும்பூர் பகுதி சோழ அரசனான முதலாம் குலோத்துங்க சோழனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. முதலாம் குலோத்துங்க சோழனின் கீழ் அமைந்திருந்த அரசின் நிர்வாக தலைமை பீடமாக திகழ்ந்த இடம் எழும்பூர் நாடு. இந்த எழும்பூர் நாடு தான் தற்போதைய எக்மோர்.
சூரியன் எழும்பும் பகுதி: இந்த எழும்பூர் என்ற பெயருக்கு பல காரணங்கள் உள்ளன. அந்தவகையில், சூரியன் எழும்பும் அல்லது உதிக்கும் பகுதியில் உள்ளது என்பதால் எழும்பூர் என்ற பெயர் வந்தது எனவும், ஏலாப்பூர் ஏரி என்ற நீர்நிலை அங்கு இருந்ததாகவும் அதுவே நாளடைவில் எழும்பூர் என்று மருவியதாகவும் கூறப்படுகிறது.
நெல்லூர் சோழ கல்வெட்டு: இது குறித்த வரலாறு 1264ஆம் ஆண்டு காலத்தில் நெல்லூர் சோழ அரசர் 'விஜய கோபால்' என்பவர் குறிப்பிட்டுள்ள கல்வெட்டில் 'எழுமூர் – துடர்முனி நாடு' எனும் கிராமம் புழல் கோட்டத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.
அதற்கு பின் விஜய நகர காலத்து 'ஸ்ரீரங்கநாத யாதவராயா' கல்வெட்டில், திருவொற்றியூரில் இருந்த மடத்திற்கு, எழுமூர் – துடர்முனி நாட்டிற்கு, இன்றைய சேத்துப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர்கள் மானியம் கட்டியதாக அறியவருகிறது. மேலும் தமிழ் நூலான தேவாரத்தில் உள்ள ஆறாம் திருமுறையில் 'இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்' என்ற பாடல் வரிகள் சென்னை எழும்பூரை குறிப்பிடுகின்றன.
எழும்பூர் ரயில் நிலைய முகப்பு கட்டடம் (Credit - ETV Bharat Tamil Nadu) எழும்பூர் to எக்மோர்: 1720-ல் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த பகுதிகளில் எழும்பூரும் ஒன்று. அப்போது எழும்பூர் எனும் பெயர் ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு ஏற்ப பெயரை ஆங்கில வழிப்படுத்தினர். அப்படி வந்த பெயர் தான் 'எக்மோர்'. எழும்பூரை சுற்றி பல்வேறு வணிகங்கள் நடைபெறுகிறது. எழும்பூர் ரயில் நிலையம் லண்டனில் உள்ள ரயில் நிலையத்தை விட பெரியது. எழும்பூரை சுற்றி இருக்கும் ஒவ்வொரு தெருக்களுக்கும் ஒரு சிறப்பு உள்ளது. பாந்தியன் சாலை என்ற சாலையில் பெரும்பாலும் வெள்ளையர்கள் கூத்தும் கும்மாளமுமாக இருப்பதற்கு அங்கே வருவார்கள். அங்கு பல நட்சத்திர விடுதிகள், கிளப் என்று வெள்ளையர்கள் சந்தோசமாக இருப்பதற்கு வந்து செல்வார்கள்.
மற்றொன்று எழும்பூர் மியூசியம், இதன் தனி சிறப்பு என்னவென்றால், இந்தியாவிலே இரண்டாவது பெரிய மியூசியம் ஆகும். இங்கு பல்லாவரத்தில் அகழாய்வு செய்ததில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் மற்றும் வரலாற்று பொக்கிஷங்களை இங்கு பொதுமக்கள் பார்வைக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அந்த மியூசியத்தில் மக்களின் பார்வைக்கு பல்வேறு விலங்குகளையும் வைத்திருந்தனர். 2 ஆம் உலகப்போருக்கு பின் மியூசியத்தில் இருந்த விலங்குகளை இப்போது இருக்கும் நேரு ஸ்டேடியம் அருகில் மாற்றப்பட்டது.
எழும்பூர் ரயில் நிலைய முகப்பு கட்டடம் (Credit - ETV Bharat Tamil Nadu) காலம், காலமாக ஓர் காரணம் அல்லது அங்கு வாழ்ந்த பெரும் மனிதர் அல்லது அரசர், தொழில் சார்ந்துதான் அந்தந்த பகுதிகளுக்கு பெயர்கள் வந்துள்ளன. சில பல காரணங்களால் நாம் அந்த பெயர்களை சுருக்கியோ, ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் காரணத்தாலும். ஒரு வரலாற்றை மறந்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை.. டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக இருப்பது எப்படி?