தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“எம்மொழிக்கும் சளைத்ததல்ல தமிழ் மொழி!” முதலமைச்சர் தாய் மொழி தினத்திற்கு வாழ்த்து! - MK STALIN WORLD MOTHER LANGUAGE DAY

உலகம் முழுவதும் தாய் மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எந்த மொழிக்கும் சளைத்ததல்ல தமிழ் மொழி' எனக் கூறி தாய்மொழி தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 10:30 AM IST

சென்னை:உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் உள்ள பன்முக மொழி, கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மொழிகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் இந்த தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, கடந்த 1999ஆம் ஆண்டு தாய்மொழி தினத்தை அங்கீகரித்தது. பங்களாதேஷ் அரசின் தொடர் முயற்சிகளாலும், உலக நாடுகளின் ஆதரவாலும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

உலகம் முழுவதும் பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஐம்பது சதவீத மொழிகள் அழியும் தருவாயில் உள்ளதால், அவற்றை பாதுகாக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் யுனெஸ்கோ ஆண்டுதோறும் ஒரு கருப்பொருள் கொண்டு இந்த தினத்தை கொண்டாடு நிலையில் இந்த ஆண்டு 25வது தாய்மொழி தினத்தை முன்னிட்டு “மொழிகள் முக்கியம்: சர்வதேச தாய்மொழி தினத்தின் வெள்ளி விழா” என்ற தலைப்பில் கொண்டாப்படுகிறது.

இதன் சிறப்பாக யுனெஸ்கோ பிப்ரவரி 20-21 தேதிகளில் யுனெஸ்கோ தலைமையகத்தில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் இந்த தாய்மொழியின் முக்கியத்துவத்தை விளக்கும்படி இந்த நாளின் நோக்கம்:

பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்: சிறந்த கற்றல் விளைவுகளுக்காக பள்ளிகளில் தாய்மொழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.

மொழி அழிவைத் தடுக்க வேண்டும்: அழிந்து வரும் மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றை மீட்டெடுக்க முயற்சிகளை வலியுறுத்துதல்.

கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்: சமூகங்கள் தங்கள் மொழியியல் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணுவதை உறுதி செய்தல்.

பழங்குடி சமூகங்களை மேம்படுத்த வேண்டும்: பழங்குடி மக்களின் மொழியியல் உரிமைகளை ஆதரித்தல் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்தல்.

இந்நிலையில், இன்று தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழக பொது பட்ஜெட் 2025.. பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?

அதில், “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி (தமிழ் மொழி). இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும், புறத்திலும், அன்பும், வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி. தமிழ் போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details