தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் உலக மரபு வாரம்: 'ஆசிரியம்' கல்வெட்டை ஒப்படைத்த தொல்நடை குழுவினர்! - WORLD HERITAGE WEEK

சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார விழாவின் மூன்றாம் நிகழ்வாக சிவகங்கை தொல்நடை குழுவினர் தாங்கள் கண்டுபிடித்த அரிய வகை 'ஆசிரியம்' கல்வெட்டை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்.

ஆசிரியம் கல்வெட்டு ஒப்படைப்பு விழா
ஆசிரியம் கல்வெட்டு ஒப்படைப்பு விழா (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 3:58 PM IST

சிவகங்கை:சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு மற்றும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து 'உலக மரபு வாரத்தையொட்டி 'முப்பெரும் விழா' கொண்டாடினர்.

ஐநா சபையின் வழிகாட்டுதலின்படி உலக மரபு வாரமாக நவம்பர் 19 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. எனவே உலகம் முழுவதும் உள்ள தொல்லியல் துறை, தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உலக மரபு வாரத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ள தொல்லியல் சின்னங்களை அனைவரின் பார்வைக்காக கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை தொல்நடைக்குழு இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு உலக மரபு வார விழாக் கொண்டாட்டமாக நேற்று (நவம்பர்.23) சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் முப்பெரும் விழா

இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பேசிய அவர், “முதல் நிகழ்வு:இந்த விழாவின் முதல் நிகழ்வாக 'மரபு நமது உறவு' எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. 'கல்லெழுத்து நமது மரபெழுத்து' எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், 'தொன்மை பேசும் பாறை ஓவியங்கள்' என்ற தலைப்பில் கவிஞர் உஷா, 'பெருங்கற்காலம் மனிதம் போற்றும் பொற்காலம்' எனும் தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், 'குடைவரை பெருங்கொடை' என்ற தலைப்பில் கவிஞர் ப்ரீத்தி அங்கயற்கண்ணி, 'கீழடி நமது தாய்மடி' எனும் தலைப்பில் கவிஞர் ந.முகமது கைஃப் என ஐந்து கவிஞர்கள் கவிதை பாடினர்.

இதையும் படிங்க:நெசவாளர்களுக்கு வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு - அமைச்சர் ஆர்.காந்தி

இரண்டாம் நிகழ்வு:அதனைத் தொடர்ந்து, கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தேனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் எழில்மிகு வைகைக் குழுவைச் சேர்ந்த மூ.செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூல வைகையில் தொல்லியல் தடயங்கள் எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவர் நா. சுந்தரராஜன் தலைமை வகித்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி. பக்கிரிசாமி வரவேற்புரைத்தார், புலவர் கா.காளிராசா முன்னிலை வகித்து நோக்க உரையாற்றினார். சிவகங்கை தொல்நடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்யா கணபதி முன்னிலை வகித்தார்.

பின், விட்டனேரி ஊராட்சி மன்றத் தலைவர் கவிஞர் அ. வரதன், சிவகங்கை தமிழவையம் பா. மகேந்திரன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணா, சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் து. முனீஸ்வரன், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினரும் சாக்கவயல் தலைமை ஆசிரியருமான ஜ. ஈஸ்வரி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். இந்த நிகழ்வை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா. நரசிம்மன் தொகுத்து வழங்கினார். இணைச்செயலர் க. முத்துக்குமரன் நன்றியுரைத்தார்.

மூன்றாம் நிகழ்வு:மூன்றாம் நிகழ்வாக கல்வெட்டு ஒப்படைப்பு நடைபெற்றது. இதில் சிவகங்கை தொல்நடைக் குழுவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லங்குடி விட்டனேரியில் கண்டெடுத்த 13ஆம் நூற்றாண்டு எழுத்து அமைதியில் அமைந்த மாளவச் சக்கரவர்த்தி, கீழ் மங்கலநாட்டு, வழுதிவாள் மங்கலம் ஆகிய செய்திகளை உள்ளடக்கிய அடைக்கலம் பற்றி குறிப்பிடும் அரிய வகை 'ஆசிரியம் கல்வெட்டு' சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற மாணவர்கள், ஆசிரியர்கள், சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த பா. இளங்கோ, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆசிரியர் லோப மித்ரா, இலக்கிய வடிவு, தினேஷ் சேதுபதி பிரபாகர், முத்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்" என புலவர் காளிராசா தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details