தமிழ்நாடு

tamil nadu

கழிவுநீர் கால்வாயில் கிடைத்த தங்க பிஸ்கட் மூலம் ஓவர்நைட்டில் லட்சாதிபதி ஆன தொழிலாளி… போலீசார் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 1:54 PM IST

Ranipet news: அரக்கோணம் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் தங்கம், வெள்ளி துகள்கள் சேகரிக்கும் தொழில் செய்யும் நபர், தனக்கு கிடைத்த தங்க பிஸ்கெட்டை விற்று, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் கால்வாயில் கிடைத்த தங்க பிஸ்கட் மூலம் ஓவர்நைட்டில் லட்சாதிபதி ஆன தொழிலாளி
கழிவுநீர் கால்வாயில் கிடைத்த தங்க பிஸ்கட் மூலம் ஓவர்நைட்டில் லட்சாதிபதி ஆன தொழிலாளி

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த கைனூர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (59). இவரது மனைவி கவுரி (50). இவர்கள் இருவரும் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள நகைக்கடைகள் அடங்கிய பகுதியில், கழிவு நீர் கால்வாயில் மண்ணை சலித்து, அதிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளித் துகள்களை சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அதே போன்று கழிவு நீர் கால்வாய் மண்ணை சலித்த போது, ஒரு தங்க பிஸ்கட் கிடைத்துள்ளது. அதனை எடுத்து வந்த முருகன், தங்க பிஸ்கட்டின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து அரக்கோணம், திருத்தணி, சோளிங்கர் உள்ளிட்ட பகுதியில் உள்ள நகைக்கடைகளில் விற்று பணமாக்கி உள்ளார்.

அந்த பணத்தில் தன் தொகுப்பு வீட்டில் சிமெண்ட் பூச்சு வேலைகள் செய்துள்ளார். மேலும், அந்த பணத்தில் வீட்டில் எல்இடி டிவி, பிரிட்ஜ், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளார். முருகனுக்கு திடீரென இந்தளவு வசதி வந்தது அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அரக்கோணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு, முருகனுக்கு தங்க பிஸ்கட் கிடைத்த விஷயம் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, முருகன் வீட்டுக்கு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். இது தொடர்பாக முருகன் கைனூர் ஊராட்சி மன்றத் தலைவர் உமா மகேஸ்வரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர், அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில், முருகனுக்கு அரக்கோணம் மசூதி தெருவில் தங்க பிஸ்கட் கிடைத்ததும், அதன் ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து பணமாக்கி செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் விசாரணை நடத்தியதில், வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், வெள்ளி கொலுசு, தங்க பிஸ்கட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் பறிமுதல் செய்த தங்க பிஸ்கட்டில் 80 சவரன் அளவுக்கு நகைகள் செய்யலாம் என்பது தெரிய வந்துள்ளது. வேறு தங்க பிஸ்கட் ஏதேனும் முருகன் வீட்டில் உள்ளதா என்றும் போலீசார் பரிசோதனை மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details