விழுப்புரம்:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வந்தனர். இந்த மாநாட்டிற்கு வந்துள்ள பெண்கள் தவெக மாநாடு குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர்.
நிற்பதற்கு கூட இடமில்லை:ஆம்பூரைச் சேர்ந்த மாலதி கூறுகையில், “மிகவும் சந்தோஷமாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இந்த மாநாட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். அது இன்று நிறைவேறியது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் நேற்றே இந்த ஊருக்கு வந்து விட்டோம். அருகில் தங்கி விட்டு மீண்டும் காலையில் இங்கு வந்தோம். நேற்று ஓர் அளவுக்கு இடம் இருந்தது ஆனால் இப்போது நிற்பதற்கு கூட இடமில்லாமல் உள்ளது. திடீரென்று இவ்வளவு கடைகள், இவ்வளவு மக்கள் கூட்டம் எங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை.
பெரிய ஸ்டோரி:இருப்பவர்களிலேயே உச்ச நட்சத்திரம் என்று சொன்னால் அது விஜய் தான். அதேபோல மக்களுக்கு நல்ல விஷயம் சொல்லக்கூடிய திரைப்படங்களில் தான் இவர் நடிப்பார். அவர் அரசியலுக்கு வருவார் என்று ஏற்கனவே உள் மனது சொல்லிக் கொண்டே இருந்தது. அதேபோல அவர் வந்துவிட்டார். இந்த மாநாட்டில் குட்டி ஸ்டோரி அல்ல, பெரிய ஸ்டோரி சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம். நிறுத்தாமல் இரண்டு மணி நேரம் பேசப்போகிறேன் என்று சொல்கிறார். ஆர்வமுடன் காத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
எதிர்பார்ப்பதை விட அதிகமாக செய்வார்: பின்னர் அவர்களுடைய மகன் தமன் பிரகாஷ் கூறுகையில், “நான் யுகேஜி படிக்கிறேன். நான் விஜயை நேரில் பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன். அவரை நேரில் பார்த்தால் நன்றி சொல்வேன்” என்றார். ஜெயந்தி கூறுகையில், “இவ்வளவு நாட்களாக அரசியலில் இருந்தது போல தெரியவில்லை. புதிதாக இருப்பது போல் தெரிகிறது. கண்டிப்பாக 2026ஆம் ஆண்டில் விஜய் தான் முதலமைச்சராக வேண்டும். அவருக்கு மக்கள் மீது அதிக பாசம் உள்ளது. ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: "தவெக மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகின்றனர்"-விஜய் மாநாடு குறித்து உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?