ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில், பரண் அமைப்பு சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கடம்பூர் மலைக்கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்கள் பங்கேற்றனர். மேலும், பழங்குடியினரின் பாரம்பரிய பீனாட்சி வாத்திய இசைக்கு பெண்கள் நடனம் ஆடினர்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் புகைப்படத்திற்கு மலர் தூவி, ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர். பின்னர், “சிறுமியின் கொலைக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை எங்கள் குடும்பத்தில் பயன்படுத்த மாட்டோம். பயன்படுத்தினால் எதிர்ப்போம். போதைப்பொருள்களுக்கு எதிராக போராடுவோம். குடும்பத்தில் மது அருந்துவோரை தண்டிப்போம்” என உறுதி மொழி ஏற்றனர்.