தருமபுரி:தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிக வளாகங்களில் உள்ள ஜவுளி கடைகள் உட்பட பல கடைகளில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், தருமபுரி நகர போலீசார் வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளி கடைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் திருட்டு நிகழ்ந்துள்ளது.
இதன்படி, கடந்த மே 16ஆம் தேதி, அப்பகுதியில் இருக்கும் துணிக்கடைக்கு வந்த இரண்டு பெண்கள் 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரெடிமேட் துணிகளை நூதனமான முறையில் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைபற்றி ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், கடையில் துணிகளை திருடிச் சென்ற பெண்கள் தருமபுரியில் சுற்றித் திரிவதாக தகவல் தெரிந்த கடையின் உரிமையாளர், அவர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.