சேலம்: கேரளாவில் இருந்து நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதில், அவர் ரயிலில் பயணம் செய்து் கொண்டிருக்குபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பெண்ணை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால், சேலம் ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடமேடையிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா (23). இவருடைய மனைவி லைலா (வயது 20), இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், லைலா பிரசவத்திற்காக கேரளாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 16) வியாழக்கிழமை நள்ளிரவு, அவரது கணவர் சூர்யாவுடன் ரயில் மூலம் புறப்பட்டு வந்துள்ளனர்.
இதில், ரயில் சேலம் அருகில் வந்தபோது, திடீரென லைலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சூர்யா, இது குறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், சேலம் ரயில்வே நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.