ராணிப்பேட்டை:கலவை அருகே உள்ள குப்படிசாத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் - குப்பு தம்பதிக்கு ரஞ்சித் (30), சதீஷ் (28) என இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சதீஷ், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே உணவகத்தில் பணியாற்றி வரும் சென்னை பெருங்குடி கல்லுட்டை பகுதியைச் சேர்ந்த சத்யவாணி (42) என்ற பெண் திருமணமாகி கணவருடன் விவாகரத்து ஏற்பட்டு, தனிமையில் வாழ்ந்து வருகிறார். மேலும், சத்யவாணிக்கு பிறந்த இரு பெண் பிள்ளைகளும் விவாகரத்தான அவரது கணவருடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சதீஷுக்கும், சத்யவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி, சதீஷின் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணமும் செய்து, கடந்த 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு சதீஷுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து, செய்யாறு அடுத்த புளிரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுபாஷினியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மேலும், இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த விவகாரம் சத்யவாணிக்கு தெரியவந்த நிலையில், சதீஷை தொடர்ந்து தன்னுடன் வாழுமாறு சத்தியவாணி கேட்டு வந்ததுடன், இரண்டு முறை வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜுலை 17ஆம் தேதியன்று சத்யவாணி, தனது தோழிகள் தனலட்சுமி (42) மற்றும் புவனேஸ்வரி (28) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலுடன் பேச்சுவார்த்தை நடத்த சதீஷ் ஊரான குப்படிசாத்தம் கிராமத்திற்கு காரில் காலை 5 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சதீஷ் இல்லாததால் அவரது நிலத்திற்குச் சென்றுள்ளனர்.