திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் வசிப்பவர் நம்பி. இவர் ஊர்க்காவல் படையில் கமாண்டராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், அடுத்துள்ள தெருவில் நம்பியின் 84 வயதான தாய் ருக்மணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி ருக்மணிக்கு இரவு நேரத்தில் நம்பியின் மகன், பாட்டிக்குத் துணைக்கு இருந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பகல் நேரத்தில் தனது தாய் ருக்மணியை பராமரித்துப் பாதுகாக்க நான்கு நாட்களுக்கு முன்பு ஆலங்குளம் அடுத்த கழுநீர்குளம் ஊரைச் சேர்ந்த கனகரத்தினம் (41) என்ற பெண்ணை பணியமர்த்தியுள்ளார். வேலைக்கு வந்த நான்கு நாட்களாக மூதாட்டி ருக்மணியை சரியாக பராமரித்து பாதுகாத்துக் கொண்டுள்ளார் கனகரத்தினம்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ருக்மணியின் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க நகைகளைப் பார்த்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் செல்ல கனகரத்தினம் திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்று (ஜூலை 04) இரவு பணி முடிந்து வீடு திரும்பும் வேலையில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க செயின்கள் இரண்டையும் பறித்துக் கொண்டு அவர் காதில் மாட்டி இருந்த தங்கக் கம்மலை காதில் இருந்து பிடுங்கியுள்ளார்.