தென்காசி: இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டதன் காரணமாக, தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அமைந்துள்ள புளியங்குடி கிராமத்தில் கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு, தர்பூசணி பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடையநல்லூர் மற்றும் புளியங்குடி ஆகிய பகுதிகளில் வெயில் மிக அதிகம். எனவே, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் தர்பூசணி பழத்தை அதிகமாக நாடுகின்றனர். கடையநல்லூர் - புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாலான கடைகளில் தர்பூசணி பழம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, ஒரு கிலோ தர்பூசணி பழம் 20 ரூபாய்க்கும், கடைகளில் ஒரு பழத்தை வெட்டி ஒவ்வொரு துண்டுகளாக வெட்டி ஒரு துண்டு 10 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் இந்த தர்பூசணி பழத்தை விரும்பி உண்ணுகின்றனர்.
இது குறித்து தர்பூசணி பழ வியாபாரிகள் கூறுகையில், "தர்பூசணி பழம் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். உடம்பில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் அனைவருக்கும் இந்த தர்பூசணி பழம் ஒரு வரப்பிரசாதம். மேலும், புளியங்குடி பகுதியில் தர்பூசணி பழத்தின் வரத்து அதிகமாக இருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் பொதுமக்களும் தர்பூசணி பழத்தை வாங்கி அதிகமாக பயன் பெறுகின்றனர். இதனால் எங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது" என்று வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் உறுதி!