தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் நீதிமன்ற காலக்கெடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் - செந்தில் பாலாஜி தரப்பு! - madras high court

Senthil Balaji: செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை 3 மாதங்களில் முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

senthil balaji
செந்தில் பாலாஜியின் வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 3:26 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.

அதனையடுத்து, மார்ச் 4ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, இவ்வழக்கில் அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியின் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவதை மறுப்பதாகக் கூறி, சட்டப்படிதான் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றக் குற்றத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளதால், தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வழக்கின் விசாரணையைத் துவங்க தயாராக உள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரணை செய்து, 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பின்னர், செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விசாரணை மார்ச் 6ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (மார்ச் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கௌதமன், ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி அல்லி, வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனிடம் 1,500 வீடியோக்கள் பறிமுதல்..விடுதலைப் புலிகள் தொடர்பான வீடியோவா? - என்.ஐ.ஏ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details