திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சத்தரப்பட்டியைச் சேர்ந்தவர் பாரிச்சாமி. இவருக்கு திருமணம் ஆகி பரிமளா என்ற மனைவியும், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இவர் அபுதாபியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் ரமேஷின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறை நாட்களின் போது, ரமேஷ் கோழிப்பண்ணைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், ரமேஷுக்கும், பாரிச்சாமியின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு திருமணம் மீறிய உறவாக மாறி உள்ளது. இது குறித்து அறிந்த பாரிச்சாமி அவர்களைக் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தை கைவிடாததால், பாரிச்சாமி ரமேஷின் கோழிப்பண்ணையில் இருந்து வேலையை விட்டுவிட்டு, வேடசந்தூர் அருகே உள்ள பெரியபட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது குடும்பத்தையும் வேடச்சந்தூருக்கு அழைத்து வந்துள்ளார். இது குறித்து பாரிச்சாமி மனைவி பரிமளா, வெளிநாட்டிலிருந்த ரமேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பாரிச்சாமி தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், திருமணம் மீறிய உறவிற்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்றும் ரமேஷிடம் கூறியுள்ளார்.
தான் வெளிநாட்டில் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய செலவுக்கு பணம் கொடுப்பதாக ரமேஷ் கூறியுள்ளார். அதனை அடுத்து, பரிமளா மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் தருவதாகக் கூறி, கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார்.