கோயம்புத்தூர்: தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியையும், குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்திய கணவரை, கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சவுரிபாளையம் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (40). பாக்கியம் என்ற பெண்ணுடன் திருமணமான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும், சண்முகநாதன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சண்முகநாதன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாக்கியம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சண்முகநாதனின் சகோதரர் கேசவன் மற்றும் தங்கை மகாலட்சுமி உள்ளிட்டோர் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சண்முகநாதன் கழுத்தில் காயங்கள் இருப்பதைப் பார்த்த மகாலட்சுமிக்கு சந்தேகம் வந்துள்ளது.
அதனடிப்படையில், தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, வீட்டில் இறந்து கிடந்த சண்முகநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது மனைவி பாக்கியத்திடம் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் கெடுபிடியாக விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில், தனது கணவன் தினமும் மது அருந்திவிட்டு வந்து, குழந்தைகளையும், தன்னையும் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து தானே என் கணவர் அசந்து தூங்கும் போது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து பாக்கியத்தை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நெல்லையில் இரட்டை கொலை: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெறிச்செயல்!