சென்னை:தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பைக் கொள்முதல் செய்யக் கோரி, தனியார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில், கூடுதல் ஊட்டச்சத்து நிறைந்த மசூர் பருப்பைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு மறுத்துள்ளது.
விலை குறைந்த இந்த பருப்பைக் கொள்முதல் செய்யும் போது, தமிழக அரசுக்கு மாதத்துக்கு 150 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், தமிழக மக்கள் மசூர் பருப்பை விடத் துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர் என்பதால், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது எனவும், எதிர் காலத்தில் தேவை ஏற்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.