சேலம்: திமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதி மேலாண்மை குறித்த புரிதல் இல்லை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை மூலமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,"தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்து சட்டமன்றத்தில் பேசியபோது அமைச்சர் முதலமைச்சர் உள்ளிட்டோர் அமைதியாக இருந்தனர். அதிக கடன் சுமை இருப்பதாக தான் தெரிவித்த கருத்துக்கு சட்டமன்றத்தில் நேரடியாக அவர்கள் பதில் கூறவில்லை.
அரசு அமைத்த குழு என்ன செய்தது?:இப்போது நிதி அமைச்சர் ஏன் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்? நிதி மேலாண்மையை சீர்படுத்த திமுக அரசு அமைத்த குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? நிதி மேலாண்மை குறித்து அரசுக்கு அறிக்கை ஏதேனும் கொடுத்துள்ளதா? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும். நெருக்கடியிலும் சாதித்த அதிமுக அதிமுக ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் 36,000 கோடி செலவு செய்ய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால்தான் அதிமுக அரசுக்கு சிக்கல்களும் சவால்களும் இருந்தன. அதனை சமாளிக்க அப்போது பல லட்சம் கோடி செலவும் செய்தோம்.
நெருக்கடியான காலத்தில் ஆட்சி நடத்திய போது அதிமுக 3 லட்சத்து 53 ஆயிரம் கோடி மட்டுமே கடன் பெற்று இருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் மற்றும் மதுபான விற்பனை, மின்சார வரி, ஜி எஸ் டி, கலால் வரி, வாகன வரி, மத்திய அரசின் நிதி பங்களிப்பு என அதிமுக ஆட்சிக் காலத்தை விட திமுக அரசுக்கு 24, 830 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 894 கோடி தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.