சென்னை:திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்கு குஷ்பூ தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து, மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அண்மையில் பாஜகவில் தனது கட்சியை இணைத்த சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இதனையடுத்து, அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதில், "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே..அவர்களை குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமாரை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். எந்தவொரு காரணமும் இன்றி பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி, அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பொய்யான செய்திகளை வெளியிட்டு பேசியிருக்கிறார். மேலும், ராதிகா சரத்குமாரின் ஒழுக்கத்தையும், இந்து மத உணர்வுகளையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். அந்த காணொளி தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பார்த்து மிக மன வேதனை அடைந்துள்ளனர். எனவே, ராதிகா சரத்குமார் பெயருக்கு கலங்கம் விளைவித்து பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தகுதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"மதுரை வீரன் விஜயகாந்தை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..."- ரஜினிகாந்த் உருக்கம்! - Rajinikanth Praises Vijayakanth