கே.வி.தங்கபாலு பிரத்யேக பேட்டி (Credit to ETV Bharat Tamil Nadu) திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. அவரது உடல் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டு நான்கு நாட்களாகியும், இதுவரை அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை போலீசார் தீர்மானிக்கவில்லை.
குறிப்பாக, ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களான முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட பலரது பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணத்தை இழந்திருப்பதாகவும் அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் எழுதி இருந்தார்.
பொதுவாக, அரசியல் தலைவர்கள் என்றாலே கொடுக்கல், வாங்கல் இருப்பது வழக்கம். இந்த சூழ்நிலையில், மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் வெளிப்படையாக தேர்தலில் தான் தங்கபாலு கூறியதன் பெயரில் பணம் செலவு செய்ததாகவும், அந்த பணம் தனக்கு திரும்பக் கிடைக்கவில்லை என்று மனக்குமுறலைத் தெரிவித்திருந்தார்.
இதனால், ஜெயக்குமார் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், கடிதத்தில் ஜெயக்குமார் தங்கபாலுவின் பெயரைக் குறிப்பிட காரணம் என்ன என்பது குறித்து ஈடிவி பாரத் சார்பில் தங்கபாலுவிடம் பிரத்தியேக நேர்காணல் எடுக்கப்பட்டது.
அதன்படி, கடிதத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டதை தாண்டி ஜெயக்குமார் ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவர். எனவே, அவரது இழப்பை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “காங்கிரஸ் தோழர்கள் யார் அகால மரணம் அடைந்தாலும் நாங்கள் வருந்துகிறோம். காங்கிரஸ் தோழர்கள் இதுபோன்ற நிலைக்கு ஆளாகக் கூடாது என விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஜெயக்குமாரின் கடைசி நிமிட காட்சிகள் வெளியானதில், அவர் மிகவும் இயல்பாகவே இருந்தார். தேர்தலில் நீங்கள் அவருடன் இணைந்து பணியாற்றினீர்கள். அப்போது அவர் என்ன மனநிலையில் இருந்தார் என்ற கேள்விக்கு, "தேர்தலில் பணியாற்றும் போது குறிப்பிட்டபடி கட்சி வேலையைப் பார்த்தார். தேர்தல் நேரத்தில் அவர் மனக்குமுறல் எதையும் கூறவில்லை. இயல்பாகவே இருந்தார்" என்றார்.
அப்படி என்றால், கடிதத்தில் உங்கள் பெயரைக் குறிப்பிடக் காரணம் என்ன என்ற கேள்விக்கு, "அது புரியாத புதிராக உள்ளது. இதற்கு பின்னால் சதி இருக்கிறது. எனது பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தவறான செய்தியைக் குறிப்பிட்டு இருக்கிறார். அரசியல் வாழ்வில் நான் 54 ஆண்டுகள் ஒரே கட்சியில் இருக்கிறேன். இதுவரை என் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டை யாரும் சுமத்தவில்லை. அது அனைவருக்கும் தெரியும். இதுவரை நான் கொடுத்து தான் பழக்கப்பட்டவன். வாங்கி பழக்கப்பட்டவன் இல்லை. அப்படி வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
தேர்தல் நேரத்தில் தேர்தல் நடைமுறை என்பது எல்லா கட்சிகளுக்கும் பொதுவான விஷயம். கட்சித் தலைமை மற்றும் வேட்பாளர்கள் தான் தேர்தல் நடைமுறைகளை ஒருங்கிணைப்பார்கள். அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நான் இங்கே 15 நாட்கள் இருந்து காங்கிரஸ் நண்பர்களை ஒருங்கிணைத்து பணியாற்றினோம்.
அது போன்ற நேரத்தில் காங்கிரஸ் தோழர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். அந்த நேரத்தில், எந்த விதமான கேள்வியும் எழவில்லை. எனவே, இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தவறானது. உண்மையற்றது பொய்யானது வேண்டுமென்றே என் மீது களங்கம் ஏற்படுத்து முயற்சி" என தெரிவித்தார்.
வழக்கின் விசாரணை நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, "இந்த வழக்கின் விசாரணையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல முயற்சியை மேற்கொண்டு வருகிறார். தனிப்பட்ட குழுக்கள் பணியாற்றி வருகிறார்கள். என்னை தொலைபேசியில் அழைத்தார். அதன் அடிப்படையில், இன்று விசாரணைக்கு வந்தேன். எனது நிலைப்பாட்டைக் கடிதம் வாயிலாகவும் எழுதிக் கொடுத்திருக்கிறேன்" எனக் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு முக்கியமான காலகட்டம். தேர்தல் நேரத்தில் இது போன்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டு இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, "தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த சர்ச்சை நடந்திருக்கக் கூடாது. அவரது இறப்பும் நடந்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். அதற்காக அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்த காங்கிரஸ்காரர்களுக்கும் இது போன்ற நிலை வரக்கூடாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? - எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? - Savukku Shankar Assault Allegation