சென்னை: அண்ணாநகரைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை சிறப்பு காவல்துறை விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்? என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமியின் மீது கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. அதையறிந்த சிறுமியின் தாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையித்திற்கு தகவல்கள் தெரிவித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினரிடம் சிறுமியின் தாய் அளித்த புகார் அளித்துள்ளார்.
ஒருதலைபட்ச விசாரணை:சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வதற்கு முன், மருத்துவமனையிலேயே பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், அதை சிறுமியின் தாய்க்கு தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்தை வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியின் தாயை அடித்ததுடன் காவல்நிலையத்திலேயே இரவு 1 மணி வரை தங்க வைத்ததாகவும், மருத்துவமனைக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.