சென்னை:18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்தித்திருக்கும் பட்சத்தில் திமுக கூட்டணிக்கு கடுமையான நெருக்கடியினை உருவாக்கியிருக்க வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக - பாஜக கூட்டணி உடைந்ததை அடுத்து இரண்டு கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், அதிமுக - பாஜக இணைந்து இந்த தேர்தலைச் சந்தித்திருக்கும் பட்சத்தில் 13 தொகுதிகள் வரை வெற்றி பெற்று இருக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, விருதுநகர், தென்காசி (தனி), சிதம்பரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளை சேர்த்தால் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையை விட அதிகமாக பெற்றுள்ளனர்.
இவ்வாறு கிட்டத்தட்ட 13 தொகுதிகளில் அதிமுக, பாஜக மற்றும் பாமக பெற்ற வாக்குகள் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி கட்சியினரின் வாக்குகளை விட அதிக அளவில் பதிவாகியுள்ளன. ஒருவேளை இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து இந்த தேர்தலைச் சந்தித்து இருந்தால் 13 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பினை உருவாக்கி இருக்கலாம்.