திருநெல்வேலி: 'எந்தவித பந்தாவும் இன்றி மிக எளிமையோடு மக்களிடம் பழகக்கூடியவர்' எனநெல்லை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ள ராமகிருஷ்ணன்(எ) கிட்டு குறித்து அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த சரவணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் இன்று அறிவிக்கப்பட்டார்.
முன்னாள் மேயராக இருந்த சரவணனை எதிர்த்து தொடர்ச்சியாக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போராடி வந்த நிலையில், உட்கட்சி பூசல் காரணமாக சரவணன் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. எனவே புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக.5) நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைவசம் வைத்துள்ளன. எனவே திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் தான் 25வது வார்டு திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன்(எ) கிட்டுவை (58 வயது) மேயர் வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
யார் இந்த கிட்டு ராமகிருஷ்ணன்?:மிக மிக எளிமையான பின்னணி கொண்ட ராமகிருஷ்ணன் நெல்லை டவுனில் வசிக்கிறார். திமுகவில் 5 முறை வட்ட செயலாளராகவம், மாநகராட்சியில் 3வது முறை கவுன்சிலராகி உள்ளார். ஆனாலும் எந்தவித பந்தாவும் இன்றி மிக எளிமையோடு மக்களிடம் பழகுவார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.