திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றன. ஒரு பிரதான கட்சியின் முக்கிய நிர்வாகி கோரமான நிலையில் இறந்த கிடந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பொறுத்தவரை, ஜெயக்குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதங்களில் குறிப்பிட்டிருந்த சொந்த கட்சியினர் மட்டுமல்லாமல், ஜெயக்குமாரின் குடும்பத்தார் அனைவரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடந்துள்ளது. இருப்பினும், ஜெயக்குமாரின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா என்ற முடிவுக்கு போலீசாரால் இதுவரை வரமுடியவில்லை.
இந்த வழக்கு தற்போது வரை சந்தேகம் மரணமாக மட்டும்தான் பதிவாகி விசாரணையானது நடந்து வருவதாக சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென்மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கை விசாரிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஐஜி கண்ணன் கூறினார்.
கடிதத்தில் சபாநாயகர் பெயர்
மேலும், இன்னும் ஒரு வாரத்தில் ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு, டிஎன்ஏ அறிக்கைகள் வந்துவிடும் என்றும் அதற்கு பிறகே இவ்வழக்கு முன்னேற்றம் அடையும் எனவும் அவர் தெரிவித்தார். ஐஜி கண்ணனின் பேட்டியில் முக்கிய தகவலாக பார்க்கப்படுவது சபாநாயகர் அப்பாவு பெயர் இந்த வழக்கில் இடம்பெற்றிருப்பதுதான். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக வெளியான முதல் கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயரும் இடம்பெற்றுள்ளது. தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று ஐஜி கண்ணன் கூறினார்.
இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது
இந்த நிலையில், ஏற்கனவே ஜெயக்குமார் வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் சூழலில், இவ்ழக்கு விசாரணைக்கா, கூடுதலாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. குறிப்பாக இந்த அதிகாரிகளில் சாகுல் ஹமீது என்பவர் புலனாய்வு எக்ஸ்பர்ட் என்கின்றனர். காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர் தற்போது தூத்துக்குடி முறப்பநாடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.