சென்னை:அரசுப் பேருந்தில் பணிக்குச் சென்ற காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மாட்டேன் என கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த போக்குவரத்துத்துறை, "வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.
மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்" என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்ன? யார் யாரெல்லாம் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பன தகவல்களை நம்மிடையே போக்குவரத்து அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
- அதன்படி, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் மோட்டார் வாகன விதிகளின் படி கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்.
- பெண்களுக்கான இலவசப் பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்ய முடியும்
- மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய அடையாள அட்டையைக் காண்பித்து சலுகை விலையில் பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம்.
- அரசுப் பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக செல்வதற்கு அவர்களுக்குரிய அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்கலாம்.
- காவல்துறையில் பணிபுரிபவர்கள் அவர்கள் பணி நிமித்தமாக இருக்கும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் வாரண்டை கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு, அதில் குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் செய்ய முடியும்.
- போக்குவரத்து துறையில் பணிபுரியும் பணியாளர்கள் ஆண்டிற்கு 5,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்யலாம். அவ்வாறு பயணம் செய்யும்போது, அவர் பணிபுரியும் பணிமனையின் கிளை மேலாளரிடமிருந்து பாஸ் வாங்கி வர வேண்டும்.
- 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மாதம் ஒன்றுக்கு 10 முறை பயணம் செய்வதற்கு, இலவச பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. அதனை நடத்துநரிடம் அளித்து, அதற்குரிய பயணச்சீட்டு பெற்று பயணம் செய்ய வேண்டும்.
- போக்குவரத்துத் துறையால் அடையாள அட்டை வழங்கப்பட்டு, டிக்கெட் பெறாமல் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், அதற்குரிய அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்யலாம்.
- அரசு சலுகை அளித்து அவ்வப்பொழுது வெளியிடப்படும் அரசாணை அடிப்படையில், போக்குவரத்து கழகத்தால் நடத்தப்படும் பேருந்துகளில் செல்வதற்கு சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.