தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.. அதிமுகவின் வாக்குகள் யாருக்கு சென்றது? - VIKRAVANDI ELECTION RESULT ANALYSIS - VIKRAVANDI ELECTION RESULT ANALYSIS

Vikravandi by-election result 2024: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை வீழ்த்தியுள்ளார். இடைத்தேர்தலை புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்குகள் யாருக்கு சென்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விக்கிரவாண்டி(கோப்புப் படம்)
விக்கிரவாண்டி(கோப்புப் படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 6:08 PM IST

சென்னை: விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் காலமானதை தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

276 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் 1,24,053 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் Vs இடைத்தேர்தல்: கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,82,426 வாக்குகள் பதிவாகியிருந்தன. மூன்று மாதங்கள் இடைவெளியில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 1,95,495 வாக்குகள் அதாவது 82.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. மக்களவைத் தேர்தலை விட 13,069 வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருந்தன.

மக்களவைத் தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிகவின் ரவிக்குமார் 72,188 வாக்குகளும், அதிமுகவின் பாக்யராஜ் 65,365 வாக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் முரளி சங்கர் 32,198 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் களஞ்சியம் 8,352 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

திமுக கூட்டணி Vs பாமக கூட்டணி வாக்கு வித்தியாசம்: ஒரே தொகுதியில் மூன்று மாத இடைவெளியில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 51,865 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணி 24,098 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியோ 2,250 வாக்குகளை கூடுதாக பெற்றுள்ளது. இடைத் தேர்தலை அதிமுக கூட்டணி புறக்கணித்தால் கடந்த தேர்தலில் அந்த கூட்டணி வாங்கிய 65,365 வாக்குகள் பிளவுபட்டு பதிவாகியுள்ளதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.

தலைவர்களின் கருத்துக்கள்: இடைத்தேர்தல் முடிவு திமுக அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் அளித்த சான்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், இது முழுக்க முழுக்க பண பலத்தால் கிடைத்த வெற்றி என திமுகவை கடுமையாக சாடியுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தங்க மூக்குத்தி, மது உள்ளிட்டவை என ஓரு ஓட்டுக்கு தலா 10 ஆயிரம் ஆளுங்கட்சி செலவு செய்துள்ளதாக அறிக்கை வாயிலாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டதா?: இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை பணம் கொடுத்து திமுக வாங்கியுள்ளது எனவும், பாமக பெற்ற வாக்குகள் சுயமரியாதையுடன் உழைத்து பெற்றவை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

நோட்டாவுக்கு 5வது இடம்:விக்கிரவாண்டி தொகுதியில் முக்கிய வேட்பாளர்களை தவிர்த்து, சுயேச்சை வேட்பாளர் சதீஷ் 932 வாக்குகள் பெற்றுள்ளார். தேர்தல் மன்னன் கே.பத்மராஜன் 17 வாக்குகள் மட்டுமே பெற்று இந்த தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளார். 859 வாக்குகள் பெற்று நோட்டா 5வது இடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுகவின் அன்னியூர் சிவா அமோக வெற்றி.. பாமக, நாதக வாங்கிய வாக்குகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details