சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த 2024 பட்ஜெட் தொடரின் போது தமிழ்நாட்டில் வறுமையைக் குறைக்கும் விதமாக முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டம்' (Thayumanavar scheme) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த திட்டத்திற்காக ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து உயர்த்த இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூக நல திட்டங்களால் வறுமையை குறைப்பதில் மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும், தாயுமானவர் திட்டம் மூலம் மிகவும் வாடிய நிலையில் வசிக்கும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் அடைய செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசின் 'நிதி ஆயோக்' சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம் தமிழ்நாட்டில் 2.2 சதவீதம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் வாடிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.