சென்னை: நடிகர் விஜய் தமது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ள நிலையில், இதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணிகளும் துவங்கியுள்ளன. இதனிடையே கட்சி துவங்கிய பின்னர் விஜய் சினிமாவில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழாமல் இல்லை.
இதற்கும் நடிகர் விஜய் தமது அறிக்கையிலேயே விளக்கம் அளித்துள்ளார். " என்னைப் பொறுத்த வரையிலும் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. முன்னோர்கள் பலரிடமிருந்து பாடங்களை படித்து அதற்காக நான் என்னை தயார் செய்து வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ள, இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப்பணிக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான, அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழக மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாக கருதுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.