சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், செம்பியம் தனிப்படை போலீசார் இதுவரை முக்கிய நபர்களாக உட்பட 28 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை முடித்து, நேற்று (அக்.3) காலை வழக்கு குறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருந்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் தனிப்படை போலீசார் 4,892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், குற்றப்பத்திரிகையில் 350 சாட்சியங்கள் சேர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய நான்கு முக்கியமான முன் விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்.. ஏ1 அக்யூஸ்ட்டாக ரவுடி நாகேந்திரன்.. முதல் மூன்று இடத்தில் யார்?
அதாவது, அஸ்வத்தாமன் நில விவகாரம் தொடர்பாகவும், சம்போ செந்தில் தலைமைச் செயலக காலணியில் வீடு விவகாரம் தொடர்பாக ரூ.30 லட்சம் மிரட்டி வாங்கியதும், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சி என இந்த நான்கு காரணங்களே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய முக்கிய காரணங்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்த கொலை வழக்கில் ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முதல் குற்றவாளியான நாகேந்திரன் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார். இரண்டாவது குற்றவாளி சம்போ செந்தில் பண உதவிக்கு முக்கிய உதவி செய்துள்ளார். ஆறு மாதம் திட்டத்திற்கு 10 லட்சம் செலவு செய்துள்ளார், மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன். நாகேந்திரன் திட்டத்தை வெளியிலிருந்து செயல்படுத்தியுள்ளார் என குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், 6 மாதம் திட்டமிட்டு நடத்தி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளதாகவும், ரூ.10 லட்சம் மொத்தமாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு செலவிடப்பட்டுள்ளது எனவும், ஆற்காடு சுரேஷ் மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என வேகப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.
தற்போது காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் 63 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்தும், வங்கிக் கணக்கிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணமும், ரொக்கமாக ரூ.80 லட்சமும் பறிமுதல் செய்து இருப்பதாகவும்" குற்றப்பத்திரிகையில் செம்பியம் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்