மதுரை: மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்த்தது போலவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பரப்புரையின்போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், சுமார் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனை வீழ்த்தியிருக்கிறார்.
சு.வெங்கடேசனின் வெற்றி சாத்தியமானது எப்படி?: மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு மற்றும் மதுரை மத்தி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அந்தந்த பகுதி வாக்காளர்களை மையப்படுத்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியைத் திட்டமிட்டு செலவு செய்தார் என்றும், இதில் எந்தவித விமர்சனங்களுக்கும் இடம் தராமல் தொகுதி நிதி முழுவதுமாக சென்று சேருவதற்கு இவரது கவனமும் அக்கறையும் கூடுதலாக இருந்தது என்றும் மதுரை வட்டாரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கூறுகின்றனர்.
கடந்த 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தலின்போது இடம் பெற்ற அதே கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு, கூடுதலாக மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளின் வருகை திமுக கூட்டணியை இந்த முறை மேலும் பலப்படுத்தியது. மேலும், முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காரணத்தால், இவர்களது பரப்புரை பலமும் சு.வெங்கடேசனுக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது.
அதிமுக வாக்கு சதவிகித இழப்பு: அதிமுக சார்பாக வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட டாக்டர்.சரவணன், தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்றாலும், திமுக, மதிமுக, பாஜக, அதிமுக என பல கட்சிகள் மாறியவர் என்ற முத்திரையும் விமர்சனமும் இருந்தது. ஆனாலும், முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகமாக உள்ள மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவுக்கு பொதுவாக செல்வாக்கு இருக்கும். இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, வன்னியர் சமூகத்தினருக்கு வழங்கிய 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, அந்த ஆதரவு நிலையில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுமட்டும் அல்லாது, அதிமுக தற்போது பிளவுபட்டு டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி என பிரிந்து நின்றதும் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழப்பம் காரணமாக அதிமுகவுக்கு கிடைக்கவேண்டிய வாக்குகள் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு சென்றதால், அதிமுக வேட்பாளர் சரவணன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.