நீலகிரி: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, நேற்று (மார்ச் 27) வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்த பரிசீலனையானது தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா முன்னிலையில் நடைபெற்றது. திமுக வேட்பாளர் ஆ. ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், பாஜக வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 33 வேட்பாளர்களின் வேட்புமனு இந்த தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனின் வேட்புமனு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.