சென்னை:பருவ மழை உள்ளிட்ட காரணிகளால் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை தக்காளி விலை சற்று அதிகரிப்பது வாடிக்கைதான் என்றாலும் நடப்பு ஆண்டில் கிடுகிடுவென விலை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 50 மற்றும் 60 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை, தற்போது 100 ரூபாயை தொட்டிருக்கிறது.
இது குறித்து கோயம்பேடு காய்கறி சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமாரிடம் பேசினோம், அப்போது அவர் கூறுகையில், "கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 55 முதல் 60 லாரிகளில் சுமார் 1300 டன் தக்காளி விற்பனைக்கு வரும். அப்படி வரும் தக்காளிகள் தமிழகத்தில் மட்டும் இன்றி அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் விற்பனைக்கு வருகிறது.
மழைப் பொழிவு:இந்த நிலையில் தற்போது அண்டை மாநிலங்களில் மழைப் பொழிவு இருப்பதாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைச்சல் முடிந்து இருப்பதாலும், தற்போது 32 முதல் 35 லாரிகளில் 850 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
அதாவது வழக்கமாக வருவதை விட 400 ஒரு டன் தக்காளி குறைவாக வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் 50 மற்றும் 60 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை தற்போது 100 ரூபாயைத் தொட்டு இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:இப்படியெல்லாம் கொலு வைக்க முடியுமா? நவராத்திரி கொலுவுக்காக வீட்டையே அர்ப்பணித்த திருநெல்வேலி குடும்பம்!