சென்னை: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க வேலை செய்து வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பெரும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன. அதில் ஓரிரு மாநிலங்களில் வெற்றியும் கண்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் சிறுசிறு சலசலப்பு இருந்தாலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடும் இறுதி நிலையை எட்டியுள்ளது.
ஏற்கனவே கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள 37 தொகுதியில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் இன்றைய தினமே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.