கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்ததாக கல்பனா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ள கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார். மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்ற இவரின் கணவர் ஆனந்த குமார் திமுகவில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவால் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, திமுக மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஈகோ, அதிகாரிகளுடன் பனிப்போர், மாநகராட்சியில் விடப்படும் டெண்டர்களில் கமிஷன் என தொடர்ந்து எதிர்ப்புகளை சம்பாதித்த மேயர் கல்பனா, ஒரு கட்டத்தில் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் தகராறு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் திமுக உறுப்பினர்களே கடுமையாக எதிர்த்து தலைமைக்கு புகார் அனுப்பினர். இருப்பினும், பிரச்னை எழும்போது எல்லாம் செந்தில் பாலாஜியால் மேயராக்கப்பட்டவர் என்பதால் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்களை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சமாதானம் செய்தனர்.
இதே போன்று, தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் மேல்மட்டத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றது. மேயர் கல்பனாவின் நடவடிக்கைகளால் அமைச்சர் கே.என்.நேரு, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாலும், எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருவதாலும் தலைமையும் அவரை மாற்ற முடிவு செய்து உளவுத்துறை, உயரதிகாரிகள், மூத்த நிர்வாகிகள் மூலம் அவருக்கு மாற்றாக யாரை மேயராக்கலாம் என ரகசிய அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பதறிப்போன மேயர், அவசர அவசரமாக சென்னை சென்று முக்கிய நிர்வாகிகளை பார்த்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளதாகவும், ஆனால் அவருக்கு ஆதரவாக பேச முன் வராததால் மேலிடத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து மேயர் கல்பனா தனது ராஜினாமைவை கொடுத்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே மேயரை மாற்றி புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதனை திமுக தலைமை கைவிட்ட நிலையில், தேர்தல் முடிவிற்கு பிறகு மேயரை ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய மேயர்:கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு இல்லம் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மேயர் கல்பனா அங்கு குடியேறிய நிலையில் வீட்டில் திடீர் திடீரென பொருள்கள் அசைகிறது, அமானுஷ்ய சக்தி இருப்பதாகச் சொல்லி அங்கு தங்காமல் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.