தேனி:18வது நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைமையிலான கூட்டணியிலுள்ள அமமுகன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் பொதுக்கூட்ட மேடைகளில், “தேனி மாவட்டம் தான் தனது அரசியல் பிறந்த மண்” என அடிக்கடி குறிப்பிட்டு வருவார். ஏனென்றால், தனது முதல் அரசியல் தேர்தல் பயணம் தேனி மாவட்டத்தில் தான் தொடங்கினார். கடந்த 1999ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், முதல்முறையாக தேனி மக்களவைத் தொகுதியில் (தொகுதி சீரமைப்புக்கு முன் பெரியகுளம் மக்களவைத் தொகுதி) அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
அப்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வேந்திரனை விட 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, முதல் முறையாக தேனி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் 2004ஆம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.எம் ஆரூண்னிடம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆனால், 2004ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டது. பின்னர், அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால், டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சில வருடங்களாக கட்சிப் பணிகள் மற்றும் வெளியிடங்களில் தலைகாட்டாத நிலையில், ஜெயலலிதா மறைந்த பின், அதிமுகவை வழிநடத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் இணைந்தனர்.
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதுசூதனனை விட 40,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை அடுத்து, 2018ஆம் ஆண்டு அதிமுகவை மீட்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை டிடிவி தினகரன் துவக்கியதாக தெரிவித்தார்.