தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாண்டில் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்! - TN CHILD MARRIAGE

Child Marriage: தமிழ்நாட்டில் குழந்தை திருமணத்தைத் செய்து வைப்பவர்களை கைது செய்தால் மட்டுமே குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் மீது பயம் வரும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கோப்புப் படம் மற்றும் பிரபாகர், சரண்யா ஜெயக்குமார் புகைப்படம்
கோப்புப் படம் மற்றும் பிரபாகர், சரண்யா ஜெயக்குமார் புகைப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:03 PM IST

வழக்கறிஞர் பிரபாகர், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாட்டில் அரசின் சட்டத்தை மீறி, குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு, அனைத்து துறைகளின் கூட்டு முயற்சியை மேற்கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகளை வலுப்படுத்தி குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது என சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை தெரிவித்துள்ளது.

குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006இன் படியும், இந்திய சட்டப்படியும், குழந்தை திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் செய்து கொள்வது. பெரும்பாலான குழந்தை திருமணங்கள் இளம் பெண்களிடையே நடைபெறுகின்றன.

இந்தச் சட்டம் குழந்தை திருமணங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றை உறுதிச் செய்கிறது. மேலும் இத்தகைய திருமணங்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும், நடத்துபவர்களுக்கும் தண்டனை அளிக்கவும் வகை செய்கிறது.

குழந்தை திருமண தடுப்புச் சட்டம் சொல்வது என்ன?: தமிழக அரசு கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியன்று குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கான மாநில விதிகளை வகுத்து அறிவித்தது. இச்சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட சமூக நல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர்களுக்கு, தகவல் தொடர்பு முறைகள் மூலம் பெறப்படும் தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், குழந்தை திருமணத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும், திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிக்கவும் அதிகாரம் உள்ளது.

கிராமப்புறங்களில் நடக்கும் குழந்தை திருமணங்களைத் தடுக்க, பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில், பஞ்சாயத்து அளவிலான மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் முடிந்து, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் குழந்தை திருமணத்தை ரத்து செய்யலாம். திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமே திருமணத்தை ரத்து செய்ய அல்லது ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்ய முடியும்.

இதையும் படிங்க:கொலையா, தற்கொலையா? - நெல்லை ஜெயக்குமார் வழக்கு குறித்து ஐஜி கண்ணன் விளக்கம்! - Jayakumar Case Report

இந்நிலையில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு, சமூக நல ஆணையர் அளித்துள்ள பதிலில், "கடந்த 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் மாவட்ட சமூக நல அலுவர்களால் தடுத்த நிறுத்தப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2021ஆம் ஆண்டில் 2633 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 707 வழக்குகள், குழந்தை திருமணத்தை செய்தவர்கள் மீது போடப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 347 திருமண
ங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 128 வழக்குகள் திருமணத்தைச் செய்தவர்கள் மீது போடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது".

இதுகுறித்து வழக்கறிஞர் பிரபாகர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ், கடந்த 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற குழந்தை திருமணங்கள் குறித்தும், சட்டரீதியாகத் தடுத்து நிறுத்தப்பட்ட விபரங்கள் பற்றியும் தகவல் கிடைத்திருக்கிறது.

கடந்த 2021 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை 7347 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் சிஎஸ்ஆர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த விரபங்களில் 2689 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தை, மாவட்ட சமூக நல அலுவலர் கண்காணித்து செயல்படுத்தி வருகிறார்.

வரும் தகவலின் அடிப்படையில் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது, 18 வயது வரை பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யமாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பும் முறை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என இருந்தாலும், பெற்றோர்கள் பெண்களுக்குத் திருமணத்தை செய்து வைக்கின்றனர். இது குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் இல்லாமல் அனைத்து சமூகத்திலும் இருக்கிறது. குழந்தை திருமணம் குறித்த தகவல் வந்த பின்னர், அதிகாரி 18 வயது வரை திருமணம் செய்யமாட்டேன் என எழுதி மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு அனுப்புவதால்தான் தடுக்க முடியவில்லை.

யார் யார் கைது செய்யப்படுவார்கள்?:இந்த சட்டத்தின்படி குழந்தை திருமணம் நடைபெறுவதாக புகார் வந்தால் திருமண பத்திரிக்கை அச்சடித்தவர், திருமண மண்டபத்தின் உரிமையாளர், மைக்செட், சாப்பாடு போட்டவர்கள் என அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும்.

எனவே தான், 'இனிமேல் இப்படி செய்யக்கூடாது' என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பும் சூழ்நிலை உள்ளது. தண்டனை அளித்தால் மட்டுமே இந்த குற்றத்தை தடுத்து நிறுத்த முடியும். சமூக நல அலுவலர் மட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

வட்டாரத்திற்கு ஒரு வழக்கினை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால்தான் சட்டத்தின் மீது அச்சம் ஏற்படும். மேலும் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்க முடியும். கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளருக்கு யார் வீட்டில் திருமணம் நடைபெறுகிறது என்பது தெரியும். ஆனால் அவர்கள் அதனை பெரிதாக கண்டும் காணாமலும் செல்கின்றனர்" என்று வழக்கறிஞர் பிரபாகர் தெரிவித்தார்.

குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் கூறும்போது, "குழந்தை திருமண தடுப்பு சட்டம் கூறுவது 18 வயதிற்கும் கீழ் இருக்கக்கூடிய பெண்ணோ, 21 வயதிற்கும் கீழ் இருக்கக்கூடிய ஆணோ திருமணம் செய்தால் சட்டப்படி குற்றமாகும்.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் விவகாரம்: திருச்சி சைபர் கிரைம் அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர்! - Youtuber Felix Gerald

அந்த கல்யாணத்தை செய்தவர்கள், நடத்தி வைப்பவர்கள், சாப்பாடு குடுத்தவர்கள், தாலி எடுத்துக் கொடுத்தவர்கள் உள்ளிட்டவர்களும் குற்றவாளிகள் என சட்டம் சொல்கிறது. இதுபோன்ற திருமணங்களை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை அலுவலர் தடுத்து நிறுத்தும் அதிகாரம் உள்ளவர்.

குழந்தை திருமணங்கள் நிறைய இடங்களில் நடக்கும்போது அதனைத் தடுத்து நிறுத்துவது சிரமமாக இருக்கிறது. சமூக நலத்துறையின் பிறத் திட்டங்களையும் சேர்த்து செய்யும் அவர்களால், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும்போதே பார்த்துச் சுட்டிக்காட்டி உள்ளோம்.

குழந்தை திருமணங்கள் நடந்தால் தண்டனைக் கிடைக்கும் என்ற பயம் மக்களிடம் இல்லை. குழந்தை திருமணம் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பயம் மக்களிடம் வரும்போது தான் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது குறையும்" என்று அவர் தெரிவித்தார்.

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குனரிடம் குழந்தை திருமணம் குறித்து கேட்டபோது, "குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 மற்றும் விதிகள் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட சமூக நல அலுவலர்கள் குழந்தை திருமணத் தடை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2021 முதல் 2024 வரை நடைபெற்ற குழந்தை திருமணங்கள் எத்தனை?: தமிழ்நாட்டில் கடந்த 2021 ஜனவரி முதல் 2024 ஜனவரி மாதம் வரை, குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக 10 ஆயிரத்து 686 தகவல்கள் பெறப்பட்டன. அவற்றில் 7486 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 3,200 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மீது மொத்தம் 2924 முதல் தகவல் அறிக்கை மற்றும் சிஎஸ்ஆர் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக 369 தகவல்கள் பெறப்பட்டன. அவற்றில் 220 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 149 குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. அவற்றின் மீது 113 முதல் தகவல் அறிக்கை மற்றும் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட அளவில் குழந்தை திருமண பணிக்குழு, கல்வி, காவல் துறை மற்றும் பிற துறைகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒரு ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. குழந்தை திருமணங்களை நிறுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்களைத் தடுக்க அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும் செயல்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்களிலிருந்து மீட்கப்பட்ட 1178 பெண் குழந்தைகளுக்குக் கடந்த 2 ஆண்டுகளில் 38.5 லட்சம் செலவில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

குழந்தை திருமணத் தடுப்புக்கான விழிப்புணர்வு: குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள், உதவி எண்கள் போன்றவை பற்றிய விழிப்புணர்வு, சமூக ஊடகத்தின் ஒரு பகுதியாக ’தமிழ் மகளிர் குரல்’ என்ற பிரத்யேக யூடியூப் சேனல் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகள், ஊராட்சித் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2020-21ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாய் செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களின் மூலம் குழந்தை திருணமத்தில் இருந்து தப்பியவர்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை மற்றும் தற்காலிக தங்குமிடம் போன்ற உதவிகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை, 'பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்' திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி வருகிறோம். பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாட மரக்கன்று நடுதல் போன்ற பல விழிப்புணர்வு நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சைல்டு லைன்: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுடன் இணைந்து சைல்டு லைன் 1098 என்ற எண்ணில் பெறப்படும் குழந்தை திருமண புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளின் கூட்டு முயற்சியை மேற்கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி, சட்டரீதியான நடவடிக்கைகளை வலுப்படுத்தி குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது" என துறை இயக்குநர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசியலுக்கு வருவீங்களா?.. நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்த ரியாக்சன்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details