தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் அமித்ஷா! எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி அழைப்பா? - அதிமுக கூட்டணி

AIADMK BJP Alliance: தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் குழப்பமேதும் இல்லாமல் வலுவான முன்னெடுப்பு செய்திருப்பது திமுக மட்டுமே, தமிழ்நாட்டில் பெரிய அளவில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எதிரணியில் நிலை வேறாக இருக்கிறது. பாஜக மாநில தலைவரான அண்ணாமலை அதிமுக கூட்டணியை சட்டை செய்யாவிட்டாலும், எடப்பாடி பழனிசாமிக்கான கூட்டணி சிக்னல் டெல்லியிலிருந்து கிடைத்திருக்கிறது. இது இன்னும் ஒரு அழைப்பா? அல்லது இறுதி அழைப்பா என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 5:30 PM IST

சென்னை:கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதில் இது தான். நாடாளுமன்றத் தேர்தல் களம் நாடு முழுவதும் அனல் பறக்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் சுறுசுறுப்பு காட்டுகின்றன.

குழப்பமில்லா INDIA கூட்டணி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும், தேசிய அரசியலிலும் சரி மாநில அரசியலிலும் சரி கூட்டணிக்கான முன்னெடுப்பை முதலிலிருந்தே வலுவாக முன்னெடுத்து வருகிறது இந்தியா கூட்டணி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே தன்னுடைய நிலைப்பாட்டில் தடுமாற்றம் இல்லை என தெளிவாக எடுத்துக்காட்டியதோடு, இந்தியா கூட்டணிக்கான முன்னெடுப்புகளோடு தயாராகி வருகிறார்.

வட மாநிலங்களில் பிகாரில் நிதிஷ்குமார், உத்தரபிரதேசத்தில் ஆர்.எல்.டி. என பிரச்சனைகள் இருந்த போதும், தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை இந்தியா கூட்டணியில் சீராக நடைபெற்று வருகிறது. திமுக தவிர்த்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் , மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதிலும் தொகுதிகள் ஒதுக்கீட்டில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், கூட்டணி முறியும் அளவுக்கு ஆபத்து ஏதும் இல்லை.

திமுகவுக்கு எதிரான கூட்டணி எது?: நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி அறிவித்துள்ள போதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பாடு இருக்காது என்பதால், திமுகவுக்கு எதிரான வாக்குகளை அள்ளப்போவது யார்? என்பது தான் தற்போதைக்கு கேள்வி. அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த மற்ற கட்சிகள் யார் அணியில் சேரப்போகிறார்கள் என்பது தான் தற்போது கேள்வியே.

எந்த கட்சி எந்த பக்கம்?: வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, மறைந்த விஜயகாந்த் துவங்கிய தேமுதிக போன்ற கட்சிகள் இரு அதிமுக, பாஜக என இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத பா.ம.க. பிரமுகர் ஒருவர், 2 விதமான கோரிக்கைகள் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்றால், 8 மக்களவைத் தொகுதிகளில் போட்டி, ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி மற்றும் தேர்தல் செலவுக்கான நிதி போன்றவை கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளன. பாஜகவுடன் கூட்டணி சேர்வது என்றால் இத்தோடு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது என்கிறார்.

இதே போன்ற கோரிக்கையுடன் தான் தேமுதிக, மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்த போதிலும், என்ன பேசப்பட்ட போது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.ஆனால், கூட்டணி தொடர்பான பாஜகவின் தூதுடன் ஜிகே வாசன் வந்தததாகவும் இதில் இணக்கமான பதில் எடப்பாடி பழனிசாமியிடன் இருந்து கிடைக்காததால் அதிருப்தியுடன் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இது தவிர புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் போன்றோரும் பாஜக கூட்டணிக்கு இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன செய்கிறார் ஓ.பி.எஸ்?: சமீப காலமாக புதிய தெம்புடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அத்தோடு வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனவும் நம்பிக்கையுடன் கூறினார்.

அன்றே அமித்ஷாவுக்கு நோ சொன்ன ஈ.பி.எஸ்: குறிப்பாக 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற திரைமறைவுப் பேச்சுவார்த்தையின் தகவல்களையும் பொதுவெளியில் போட்டு உடைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, டிடிவி தினகரன், வி.கே.ச்சிகலா என இருவரையும் கூட்டணியில் சேர்க்குமாறு அமித்ஷா கோரிக்கை விடுத்த போதும். எடப்பாடி பழனிசாமி மறுத்த்தால் அமித்ஷா கோபமாக டெல்லிக்கு சென்றார் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார்.

2021 தேர்தல் கூறும் பாடம்: 2019ம் ஆண்டில் நாடாளுமன்றத்தேர்தலில் டிடிவி தினகரனின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 21 லட்சம். இது 2021 சட்டமன்றத் தேர்தலில் பாதியாக குறைந்து 10.57 லட்சமாக இருந்தது. ஆனாலும் இந்த எண்ணிக்கை பல தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது என்பதை இங்கே நினைவு கூர வேண்டும். சுமார் 21 தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும், அமமுக வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

குறிப்பாக வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற தேமுதிகவுடன் அமமுக கூட்டணி வைத்திருந்த நிலையில் இந்த பகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியை இந்த கூட்டணி பாதித்தது. 12 திமுக வேட்பாளர்கள், 6 காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளர் ஆகியோரின் வெற்றிக்கு அமமுக பிரித்த வாக்குகள் மறைமுகமாக உதவின. இதனையும் கருத்தில் கொண்டே இம்முறை கூட்டணிக்கான கதவுகளை பாஜக இறுதி நிமிடம் வரையிலும் அகலமாக திறந்து வைத்துள்ளது. அமித்ஷாவிடமிருந்தே இதற்கான சிக்னலும் கிடைத்துள்ளது.

ஆனால் அதிமுக தரப்பிடமிருந்து இதற்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை. அமித்ஷா அளித்த பேட்டியை நான் பார்க்கவில்லை என அதற்குமேல் தொடராமல் முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, பாஜகவுக்கான கூட்டணி கதவை நாங்கள் அடைத்துவிட்டோம் என கூறியுள்ளார். இனி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்தாலும் பாஜகவுடனான கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இதனிடையே தமிழ்நாட்டிலிருந்து கே.அண்ணாமலையின் ஏற்பாட்டில் 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். இதில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த ஆபரேஷன் அதிமுகவுக்கு ஒரு முறைமுக எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ரேஷன் கார்டு உறுப்பினர்களின் கைரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.. நியாய விலைக் கடைகளில் அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details