சென்னை: தமிழக அரசியலைப் பொறுத்தவரை, சினிமாத்துறையில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்தவர்களே அதிகம். அந்த வகையில், திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் சினிமாவில் இருந்து வந்தவர்களே.
குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து மக்கள் திலகமாக மாறியவர். அவரது திரைப்பிம்பம் அவரின் அரசியல் அடித்தளத்திற்கு பெரிதும் உதவியது. அவரைப் பார்த்து அரசியலுக்கு வந்த பலரும் சோபிக்கவில்லை. காரணம், எம்ஜிஆர் படங்களிலிருந்த புரட்சிகர கருத்துகள் மற்றும் எம்ஜிஆரின் நாயக பிம்பம். எம்ஜிஆர் போல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், தமிழ் சினிமாவில் எழுத்தாளராக வலம் வந்தவர் தான். அவரும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர்.
மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து வந்து தமிழக அரசியலில் தடம் பதித்தார். இப்படி தமிழ் சினிமாவில் இருந்து பெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்திகளாக விளங்கிய நிலையில், தமிழ் சினிமா நாயகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவைத் தவிர மற்ற கட்சிகள் இங்கு போதிய வரவேற்பு பெறவில்லை என்பதே நிதர்சனம். மறைந்த நடிகர் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியை இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வளர்த்தெடுத்தார். ஆனால், தற்போது தேமுதிகவின் நிலை தமிழக அரசியலில் சற்று தடுமாறிய நிலையிலேயே இருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், திராவிட கட்சிக்குள்ளேயே ஐக்கியமாகிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று பின்வாங்கி விட்டார்.
அவ்வாறு இருக்கும் போது, நடிகர் விஜய் தற்போது அரசியல் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்க்கும் அரசியல் ஆசை வந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால், அதற்காக சட்டென வராமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது அடியை எடுத்து வைப்பது பாராட்டுக்குரியது. கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தற்போது வரை ஆன்லைன் மூலம் விறுவிறுப்பாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறார்.