சென்னை: தேசிய தேர்வு முகமை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வினை மே 5ந் தேதி 571 நகரங்களில் 4750 மையங்களில் 13 மாநில மாெழிகளில் நடத்தியது. இந்தத் தேர்வினை 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தகுதிப்பெற்றனர். நீட் தேர்வினை எழுதிய தமிழக மாணவர்கள் 8 பேர் உட்பட 67 பேர் 720க்கு 720 பெற்றுள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கேள்விக்கான விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மே 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது மாணவர்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஜூன் 1-ஆம் தேதி வரையில் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. விடைக்குறிப்புகளை வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து அவர்கள் வழங்கும் விடைக்குறிப்பு இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் சந்தேகம்: இதற்கிடையே, நீட் தேர்வின் முடிவில் 720க்கு 720 மதிப்பெண்களை 67 மாணவர்கள் எப்படி பெற முடியும் என்ற சந்தேகத்தை எழுப்பினர். இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு என்பது குழப்பமான ஒன்று, தேவையற்ற ஒன்று, நம்பிக்கை இல்லாத ஒன்றாக உள்ளதால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து வருகிறது.
67 பேர் 720க்கு 720 எவ்வாறு சாத்தியம்:இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வில் 720க்கு 720 என்ற மதிப்பெண் பெற்றவர்கள் 67 பேர், இதுதான் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 2021 ஆம் ஆண்டு 3 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். 2022 ஆம் ஆண்டு ஒருவர், 2023 ஆம் ஆண்டு விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணவர் உள்ளிட்ட 2 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதனால் தான் தற்போது நீட் தேர்வின் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் எனும் இடத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 7 பேர் 720க்கு 720 என்ற முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கான மொத்த வினாக்கள் 180. ஒவ்வொரு சரியான வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான பதில்களுக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதன்படி மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும். தவறாக பதில் அளித்து இருந்தால் 715 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இதனால் பெரிய அளவிலான முறைகேடுகள் நடத்துள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறை எப்போது தொடங்கப்பட்டது. யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்று கேள்விக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் உச்சநீதிமன்றத்தில் ஆணையின்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக கூறுகின்றனர். திடீர் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்று கூறுவதும் இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு எழுதிய 23,33,297 பேரில் எத்தனை நபர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறாமல் இருப்பது நியாயமில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரசின் விளக்கம்:வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட, 571 இடங்களில் 4750 மையங்களில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ)நீட் (இளநிலை) -2024 தேர்வை 2024 மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்றவை) சேருவதற்கான ஒரே மாதிரியான நுழைவு மற்றும் தகுதித் தேர்வாக, தேசிய தேர்வு முகமை, 2019 மே முதல் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பாக நீட் (யுஜி) தேர்வை நடத்தி வருகிறது.