தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம்? சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் வழிகாட்டுதல்கள்! - Higher education advise by kamakoti - HIGHER EDUCATION ADVISE BY KAMAKOTI

Higher education advise by IIT Madras director kamakoti: மாணவர்கள் 10 நாட்களில் 80 அடி உயரம் செல்லும் நானல் கொடி போல இல்லாமல், பனை மரமாக இருக்க வேண்டும் என 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியுள்ளார்.

ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் மாணவிகள் கோப்பு புகைப்படம்
ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் மாணவிகள் கோப்பு புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 7:36 PM IST

ஐஐடி இயக்குனர் காமகோடி பேசிய வீடியோ (Credits to ETV Bharat Tamil Nadu)

சென்னை:12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் எந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி இன்று (மே 8) ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடப்பிரிவினை படிக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள், சிவில் இன்ஜினியரிங் தெரிந்தவர்கள் குறைந்துள்ளனர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணி செய்ய ஆட்கள் குறைந்துள்ளனர். வரும் காலத்தில் எல்லாப் பிரிவுகளிலும் பயங்கரமான தேவைகள் வர இருக்கிறது.

பொருளாதரம் வளர்ச்சி அடைவதற்கு கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டி உள்ளது. கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு கட்டுமானம் உட்பட அனைத்தும் தேவையாக இருக்கிறது. அதனால், மாணவர்கள் தாங்கள் விரும்புவதை படிக்க வேண்டும் என்பதே எனது அறிவுரை.

எல்லாப் படிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்கிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்தோம். அதில் 70 சதவீதம் பேர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை படித்துள்ளனர். பெற்றோர், குழந்தைகளுக்குப் பிடித்த பாடத்தை படிக்க வையுங்கள். நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என திணிக்க வேண்டாம்.

படித்து முடித்த உடனே 10 லட்சம், 15 லட்சம் சம்பளம் எதற்கு? நமது தேவைக்கு ஏற்ப சம்பளம் இருந்தால் போதுமானது. ஒரு நானல் கொடி 10 நாட்களில் 80 அடி உயரம் செல்லும், ஆனால் 10 நாட்களில் விழுந்துவிடும். ஆனால், பனை மரம் 100 ஆண்டுகள் இருக்கும். எனவே, நாம் பனைமரமாக இருக்க வேண்டும்.

கோர் படிப்புகளில் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் நிரந்தரமானதாக இருக்கும், தேவைக்கு ஏற்ப பணம் இருக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை பொறுத்தவரையில், ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் காெள்ளலாம். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் 40 சதவீதம் பாடங்கள் ஆன்லைன் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நல்ல காரியத்தையும் செய்துள்ளனர்.

ஸ்வயம் (swayam) என்ற இணையதளத்தின் மூலமாகவும் படித்துக் கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு என்பது காலத்தின் கட்டாயம். பிடெக் படிப்பில் ஏஐ டேட்டா சயின்ஸ் படிப்பினை ஆரம்பித்துள்ளோம். தொழிற்சாலைக்கு தேவைப்படுவதால் அது காலத்தின் கட்டாயம்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சரியாகத்தான் ஆரம்பித்துள்ளனர். அதற்கான ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாவிட்டால் பயிற்சி அளித்துக் கொள்ளலாம். கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், மாணவர்கள் ஸ்வயம் பிளஸ் (swayam plus) இணையதளத்திற்குச் சென்று படித்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் வணிகவியல் படிப்புடன், சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படித்தால் நல்ல வாய்ப்பு இருக்கிறது. வங்கிகளில் டேட்டா தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. வணிகவியல், ஐசிடபுள்யுஏ, சிஏ ஆகிய படிப்புகளை படிக்கலாம்.

சட்டம் சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமாகி இருக்கின்றன. சைபர் செக்கியூரிட்டி சார்ந்த தொழில்நுட்பத்திற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. சட்டம் சார்ந்து படிப்புகள் நல்ல வாய்ப்புகளை அளிக்கும். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தாலும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. மெடிக்கல் சயின்ஸ் மற்றும் தொழில்நுட்ப படிப்பிற்கும் வாய்ப்புகள் உள்ளது.

சென்னை ஐஐடியில் உள்ள பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு எழுதி தகுதி பெற்றாலே போதுமானது, அவர்களுக்கு அட்மிஷன் அளிக்கப்படுகிறது. ஏற்கனவே 2.50 லட்சம் மாணவர்களுக்கு சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அதற்கான நுழைவுத்தேர்வினை எழுதி தகுதி பெற வேண்டும். சென்னை ஐஐடியில் பயோடெக், பயோ இன்ஜினியரிங், பயாலாஜிக்கல் சயின்ஸ் ஆகிய 3 பாடப்பிரிவுகளில் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்ச்சியும், மெடிக்கல் சயின்ஸ் படிப்பிற்கு ISER நடத்தும் தேர்வின் மூலம் சேர்க்கப்படுகின்றனர்.

நான் முதல்வன் மாணவர்களுக்கு என்பிடெல் ஸ்வயம் மூலமாக ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன் மூலம் மாணவர்கள் படித்து சேரலாம். பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் சேர்வார்கள் என எதிர்பார்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Exhibitions At Education Campus

ABOUT THE AUTHOR

...view details