சென்னை: மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் தமிழக பாஜக சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் தனித்து ஒரு கூட்டணியை அமைக்க முடியும். ஒரு வித்தியாசமான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பதற்கு பிள்ளையார்சுழி போட்ட தேர்தல் 2024 மக்களவை தேர்தல்தான்.
மூன்றாவது முறையாக ஒரு நாட்டில் ஆட்சியை தக்க வைப்பது எவ்வளவு கடினம் என அனைவருக்கும் தெரியும். நேற்று கூட இங்கிலாந்தில் ஆளும் கட்சி ஆட்சியை இழந்திருக்கிறது. ஆனால், நமது பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்திருக்கிறார். கரோனாவிற்கு பிறகு அனைத்து நாடுகளிலும் ஆட்சி மாறிய நிலையில், பாஜக மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
2024 தேர்தலில் தமிழக பாஜகவின் வாக்கு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணி மட்டும் 18 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அடுத்து வரக்கூடிய 2 ஆண்டுகள் கடினமான காலம். பாஜகவின் தொண்டர்களுக்கு எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத அடக்குமுறை தமிழகத்தில் இருக்கிறது.
தினமும் பாஜக தொண்டர்கள் மீது தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தின் அரசியல் களம் மாறிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை ஒரு வரியில் குறிப்பிட வேண்டும் என்றால், தேளிடம் கொட்டு வாங்கி தண்ணீர் குடித்த குரங்கு ஒன்று தெருவுக்கு வந்த கதைதான்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சாதாரணமாகிவிட்டது. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை நேற்று மாலை சாலையில் சாதாரணமாக வெட்டிக் கொன்றுள்ளனர். மறுபுறம், கள்ளச்சாராய மரணங்கள் சகஜமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மரக்காணம் அருகே 22 பேர் கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தனர்.
தற்போது கள்ளக்குறிச்சியில் 62 பேர் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்துள்ளனர். எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. சாமானிய மனிதன் அரசை எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்களுக்கு கிடைக்கும் பரிசு கைதாக இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகள் சாமானிய மனிதனின் குரலாக இருந்து தீயசக்தி திமுகவை ஆட்சியில் தூக்கி எறிய வேண்டும்.
தமிழகத்தில் தற்போது ஆட்சியை யார் நடத்துகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. முதலமைச்சரால் சுயமாக பேச முடிகிறதா? முடிவெடுக்கக் கூடிய திறன் இருக்கிறதா? என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், திமுக அதற்கு பதிலளிக்க தயாராக இல்லை.