கோயம்புத்தூர்: காட்டில் எவ்வளவோ வன விலங்குகள் இருந்தாலும், புலி என்றாலே அதற்கு தனிகெத்து தான். புலிகளை கூட்டம் கூட்டமாகக் காண்பது மிகவும் அரிது. புலிகள் ஒரு தனிமை விரும்பி. அதிலும், முக்கியமாக ஆண் புலிகள் பெரும்பாலும் தனியாகத்தான் வேட்டையாடும்.
உலகம் அளவில் 1900களில் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக புலிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டதில் 2000-ம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 4,000க்கும் கீழாக குறைந்துள்ளது. தற்போது 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 3,890 புலிகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகிலேயே புலிகள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 60 சதவீதம் புலிகள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 300க்கும் அதிகமான புலிகள் உள்ளன.
இந்தியாவில் புலிகளின் பாதுகாப்புக்காக 49 காப்பகங்கள் உள்ளன. இவற்றில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகார்ஜுனாசாகர் - ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்தான் மிகப்பெரியது. சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவுக்கு மேல் இந்தக் காப்பகம் அமைந்துள்ளது. அதேபோல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தான் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயம். இந்த சரணாலயம் 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுமார் 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
'புராஜெக்ட் டைகர்' திட்டம்:இயற்கை சமநிலையைப் பேணும் புலிகள் அழிந்துவரும் நிலையில் உள்ளதால், புலிகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதியை சர்வதேச புலிகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூலை 29ல் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புலிகளின் அவசியம், அவற்றின் முக்கியத்துவம் குறித்து 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், "அழிந்துவரும் நிலையில் உள்ள புலிகளை பாதுகாக்க 2000-ம் ஆண்டில் 'புராஜெக்ட் டைகர்' திட்டம் கொண்டுவரப்பட்டது. புலிகளின் எண்ணிக்கை சரிந்தபோது தேசிய புலிகள் காப்பகம் ஆணையம் உருவாக்கப்பட்டது.
அதன்படி, புலிகள் கணக்கெடுப்பு முறைகள் மாற்றப்பட்டன. வடஇந்தியாவில் புலிகள் இல்லை என்பது தெரிய வந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அவை கண்காணிக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 1,411 புலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.