திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கடந்த நான்காம் தேதி அவரது உடல் விவசாய தோட்டத்தின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.
உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் நேற்று மாலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், "ஜெயக்குமாரின் உடலில் அவரது குரல்வளை முற்றிலும் எரிந்து போய் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது நுரையீரலில் எவ்வித திரவங்களும் இடம்பெறவில்லை. ஏற்கனவே, உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே, குரல்வளை முற்றிலும் எரிந்து போகும் நுரையீரலில் திரவங்கள் ஏதும் இருக்காது என்பது மருத்துவர்களின் தகவல் ஆகும். இதன்மூலம், ஜெயக்குமார் உயிரிழந்த பிறகு அவரது சடலம் தோட்டத்தில் எரியூட்டப்பட்டு இருக்கலாம்" என்பது மருத்துவ அறிக்கை தகவலாக உள்ளது.
இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது. கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளதால், விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டு விட்டாலும் இதனை உயர் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்துவதற்காக சென்னைக்கு உடற்கூறு பரிசோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.