நாமக்கல்:கேரளா மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம்-களில் கொள்ளையடித்து விட்டு கண்டெய்னர் லாரி மூலம் 7 வடமாநில கொள்ளையர்கள் தப்பிச் சென்ற போது, நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவலர் ரஞ்சித் ஆகியோரை தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்ற ஹரியானா மாநிலம் பிலால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூமாந்தீன்(37) என்பவரை காவல் ஆய்வாளர் தவமணி துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல் மற்றொரு கொள்ளையன் அஜார் அலியை கால்களில் சுட்டதில் படுகாயமடைந்து சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே கொள்ளையர்களிடம் இருந்து சுமார் 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கேரளா ஏடிஎம் கொள்ளை; பிடிபட்டவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு - மாவட்ட எஸ்பி விளக்கம்!
இந்த நிலையில், கொள்ளையன் ஜூமாந்தின் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணிக்கு மார்பு பகுதியிலும், காவலர் ரஞ்சித்-க்கு கையிலும் காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், படுகாயம் அடைந்தவர்களை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் டிஐஜி உமா ஆகியோர் நேற்று நலம் விசாரிக்க நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
அப்போது படுகாயமடைந்த காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரத்தம் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிலையில் இன்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நாமக்கல் வருகை தந்து, காயமடைந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரத்தம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோரை நலம் விசாரிக்க உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்