சென்னை : வடகிழக்கு பருவமழை மேலும் வலுப்பெறுவது தொடர்பாக வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், தற்போது வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது நாளை அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக உருவெடுத்து படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்.
மேலும், இது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தென்னிந்திய தீபகற்ப பகுதியை நோக்கி வரும் பொழுது நமக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம்.
அதேபோல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது எந்த திசையை நோக்கி நகர இருக்கிறதோ அதை பொறுத்து தான் மழை எவ்வளவு பெய்யும் என்பதை கணிக்க முடியும். கடலோரப் பகுதிகளில் கடந்து வந்தால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கிழக்கிலிருந்து வரக்கூடிய காற்று வலுப்பெற்றவுடன் உள் மாவட்டங்களில் பெய்து வரும் மழை சற்று குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த நாட்களில் காற்றின் திசை மாறியதால் உள் மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. தற்போது கிழக்கிலிருந்து காற்று வர தொடங்கி இருப்பதால் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.