கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் பிரச்சாரம் நிறைவு செய்யப்பட இருக்கும் நிலையில், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருக்கும் அண்ணாமலை, "25 நாட்களாக, செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கொடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
மோடி பிரதமராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறீர்கள். எதிர்கட்சியினர் உங்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ரூபாய் 1,000, ரூபாய் 500, ரூபாய் 250 என ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கோவை மக்களின் தன்மானத்தைப் பற்றி தெரியவில்லை.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறார். திமுக செய்ய வேண்டிய வேலை எல்லாம், மாநில அரசு செய்ய வேண்டிய வேலை எல்லாம் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கின்றனர். 33 மாதங்களாக எதுவும் செய்யாதவர்கள், வரும் காலங்களிலும் செய்யப் போவதில்லை. மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள் என நம்புகிறோம்.
500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். விவசாயிகள், இல்லத்தரசிகள், ஏழைத் தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் எங்கள் வாக்குறுதியைக் கொடுக்கிறோம். 500 நாட்களில் 100 வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டுவோம்.
கோவையை புதிய கோவையாக மாற்றிக் காட்டுவோம். நேர்மையான, அறம் சார்ந்த அரசியல் கோவையில் இருந்து ஆரம்பமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஆளுகின்ற கட்சிகள், ஆண்ட கட்சிகள் கள்ளச்சாராயம், சாராயம், போதை வஸ்துகள் மூலமாக மக்களிடமிருந்து பிழிந்து சம்பாதித்த பணத்தை இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.