சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியின் புதிய மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து அவர் சென்னை பெரம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "பகுஜன் சமாஜ் கட்சியில் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஆம்ஸ்ட்ராங் இந்த இயக்கத்தை முன்னெடுக்க ரத்தத்தை சிந்தி இருக்கின்றார். எங்கள் இயக்கத்தின் மூலம் பலனை அடைந்தவர்கள் அரசியலில் வேறு கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி என்பது அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைத்துச் செல்வது ஆகும். தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலித் கட்சி போன்ற பிம்பத்தில் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இது வெகுஜன மக்களை ஒன்றிணைத்துச் செல்லும் இயக்கம். ஆம்ஸ்ட்ராங் விட்டுச் சென்ற இடத்திலிருந்து எங்களது பணி துவங்கும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையின் செயல்பாடுகள் குறைவாகவே உள்ளது. காவல் துறையினர் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சி, புகழ்ச்சி பிடிக்காத அரசியல் கட்சிகளால் தான் இந்த கொலை அரங்கேறியுள்ளது.