தேனி: முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின் போது ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து பராமரிக்க, மூவா் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்ப்பதற்கு உத்தரவு பிறப்பித்து, தற்போது இந்த குழுவில் ஐவர் உள்ளனர். இந்த மத்திய குழுவுக்கு உதவியாக, 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய துணை கண்காணிப்பு குழு அணை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மத்திய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மத்திய குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. தற்போது கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது அணையின் நீர்மட்டம் 127.05 அடியாக உள்ளது.
இந்த நிலையில் இன்று மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சதீஷ்குமாா், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்பு கோட்டச் செயற்பொறியாளா் சாம் இர்வின், உதவிச் செயற்பொறியாளா் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை அணில் குமார், நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர், உதவிப் பொறியாளா் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப்பகுதியில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.