வேலூர்: காட்பாடியில் கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை நீர்வளத்துறை அகற்றியுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியின் போது, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வேலூர் கழிஞ்சூர் ஏரி பகுதியில் 82 வீடுகள் மற்றும் தாராபடவேடு பகுதியில் 205 வீடுகள் என மொத்தம் 287 வீடுகள் ஏரி பகுதியில் உள்ளன. இப்பகுதியில் சுற்றுலா தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதால், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தவர்களை அப்பகுதியில் இருந்து அகற்றும் படி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராம்குமார் மற்றும் உதவி செயல் பொறியாளர் கோபி தலைமையில் கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைகளில் இருந்த வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் நேற்று(நவ.16) ஈடுபட்டுள்ளனர். இதில், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வீடுகளை அகற்றியுள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியுள்ளனர்.