தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள முதல் போக சாகுபடிக்காக விநாடிக்கு 900 கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் சிறிய மதகுகள் வழி சென்று பெரியார் பிரதான கால்வாய் வழியாகச் செல்லும் இந்த தண்ணீரை தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களான ஷஜீவனா, சங்கீதா, எம்.என்.பூங்கொடி ஆகியோர் தண்ணீருக்கு மலர் தூவி திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் உடன் இருந்தனர். அணையில் நீர் இருப்பை பொறுத்து மொத்தம் 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரின் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட ஆட்சியர்களும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.